Published Date: April 28, 2023
CATEGORY: POLITICS
மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்ற பெயரில் அழைக்கப்படும் என்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நூலகம் ஜூன் மாதம் திறக்கப்பட்டு, வாசகர்களின் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் போல மதுரையில் மாபெரும் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டு தளங்களுடன் நவீன வசதிகளுடன் இந்த நூலகம் அமையவுள்ளது. சிறுவர்கள், மாணவர்கள், போட்டித் தேர்வுக்கு தயாராக கூடியவர்கள் என அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் நூல்கள் இடம் பெறவுள்ளன. பார்வைத் திறன் குறைபாடுடைய வாசகர்களுக்காக பிரெய்லி எழுத்துக்களால் அமைந்த நூல்களும் இடம் பெறவுள்ளன. இலக்கியம், கலை, பண்பாடு, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இடம்பெறவுள்ளன.
இந்த நிலையில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பது:
தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மார்ச் 20 இல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, மதுரையில் சர்வதேச தரத்தில் கட்டப்பட்டு வரும் நூலகம் 'கலைஞர் நூற்றாண்டு நூலகம்' என்ற பெயரைத் தாங்கி திறக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அந்த நூலகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் என அழைக்கப்படும். இந்த நூலகம் ஜூன் மாதம் முதல் வாசகர்களை வரவேற்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Media: Dinamani